இலங்கையில் இந்த ஆண்டு 1,10,431 டெங்கு நோயாளர்கள் பதிவு – 82 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 1,10,431 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 82 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 161 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளில் நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன், 59 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர இதனைத் தெரிவித்தார்.
நவம்பர் 9ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை 74 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன்போது சுகாதார அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து 1,77,017 இடங்களைப் பரிசோதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது 51,088 இடங்களில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றில் 9,947 இடங்களில் நுளம்புக் குடம்பிகள் கண்டறியப்பட்டுள்ளன. இது பரிசோதிக்கப்பட்ட மொத்த இடங்களில் சுமார் 6 சதவீதமாகும்.
டெங்கு நோய் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய வைத்தியர் பிரஷிலா சமரவீர, இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொதுமக்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் பொறுப்புணர்வுடனான செயற்பாடுகளும் அவசியம் என வலியுறுத்தினார்.
எனவே, பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கக்கூடிய இடங்களை அகற்றி, நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் விழிப்புடன் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.