கம்பஹா சனச நிதி நெருக்கடி: பாதிக்கப்பட்ட வைப்பாளர்களின் பணத்தை மீள வழங்குவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆராய்வு
கம்பஹா மாவட்ட சனச கூட்டுறவுச் சங்கத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாகப் பாதிக்கப்பட்ட வைப்பாளர்களின் பணத்தை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உபகுழு ஆராய்ந்துள்ளது.
தனியார் நிறுவனங்களில் உரிய அனுமதியின்றி முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டமை உள்ளிட்ட நிதி முறைகேடுகள் தொடர்பில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து, வைப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பொதுக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (COPA) கீழ், கூட்டுறவுத் துறையில் நிலவும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உபகுழுவின் கூட்டம், நவம்பர் 16ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ருவந்திலக்க ஜயகொடி தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது, குறித்த கூட்டுறவுச் சங்கம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் ஆராயப்பட்டதுடன், நிர்வாகப் பலவீனங்கள் மற்றும் நிதி முறைகேடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
உரிய அனுமதிகளைப் பெறாமல் தனியார் நிறுவனங்களில் சங்கத்தின் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக ஏற்பட்ட நிதி நெருக்கடியினால் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் வெளிவைப்பாளர்களின் வைப்புப் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட வைப்பாளர்களுக்கான பணத்தைத் திரட்டும் நோக்கில், சங்கத்துக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் உபகுழு ஆராய்ந்தது.
எனினும், சில சொத்துக்களை விற்பனை செய்வதற்குத் தடையாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவுகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அந்தத் தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் கிடைக்கப்பெறும் நிதியை வைப்பாளர்களுக்கு நியாயமான முறையில் பகிர்ந்தளிப்பது குறித்தும் அதிகாரிகள் கலந்துரையாடினர்.
மேலும், அனுமதியற்ற முதலீடுகளுக்குப் பொறுப்பான முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர்களிடமிருந்து நிதி இழப்பீடுகளை அறவிடுதல் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
நிறைவுபெறாத திட்டங்களை முடித்து அவற்றின் மூலம் வருமானத்தை ஈட்டுதல், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட வைப்பாளர்கள் தங்களது முழுமையான சேமிப்புத் தொகையையும் மீளப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில், தெளிவானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் உபகுழு வலியுறுத்தியது.
இந்தக் கலந்துரையாடலில் மேல் மாகாணம் மற்றும் கம்பஹா மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள அலுவலகங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
உபகுழு உறுப்பினர்களான துஷாரி ஜயசிங்க, டி.கே. ஜயசுந்தர மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.