ஹிங்குரானா டிஸ்டிலரீஸ் நிறுவனத்தின் 270 மில்லியன் ரூபா சுங்க வரி மீளளிப்புக் கோரிக்கை நிராகரிப்பு
ஹிங்குரானா டிஸ்டிலரீஸ் (Hingurana Distilleries) தனியார் நிறுவனமும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளரும் தாக்கல் செய்த 270 மில்லியன் ரூபா சுங்க வரி மீளளிப்புக் கோரிக்கை தொடர்பான மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அத்துடன், மனுதாரர்கள் அரசாங்கத்துக்கு ஒரு மில்லியன் ரூபா வழக்குச் செலவையும் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகளான பி. சசி மகேந்திரன் மற்றும் ஆதித்யா பட்டபெந்திகே ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் குழாம், இன்று புதன்கிழமை (18) இந்தத் தீர்ப்பை வழங்கியது.
கடந்த 2015ஆம் ஆண்டு, சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 51,860 லீற்றர் எத்தில் அல்கஹோல், ஹிங்குரானா டிஸ்டிலரீஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பில் விசாரணை நடத்திய இலங்கை சுங்கத் திணைக்களம், 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குறித்த நிறுவனத்துக்கும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் ஊழியர்களுக்கும் எதிராக நிதி அபராதங்களை விதித்தது.
இதனை எதிர்த்து நிறுவனமும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளரான வி.ஏ.டி.என்.பி. பெரேராவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர்.
சுங்கத் திணைக்களத்தின் தீர்ப்பை இரத்துச் செய்வதுடன், அபராதமாகச் செலுத்தியதாகக் கூறப்படும் 270 மில்லியன் ரூபாவை மீளப் பெற்றுத் தருமாறும் அவர்கள் கோரியிருந்தனர்.
ஆரம்பகட்ட சுங்க விசாரணையின்போது, நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் தனியார் விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து மதுசாரத்தைப் பெற்றுக் கொண்டு, சொந்த நிதி இலாபத்துக்காக அதனை மதுபான உற்பத்தியில் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டிருந்தனர்.
எனினும், இந்தச் செயற்பாடுகள் நிறுவனத்தின் நிர்வாகத்துக்குத் தெரியாமல் இடம்பெற்றதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், நிறுவனத்தின் உள் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகளில் போதிய குறைபாடுகள் காணப்பட்டதை ஏற்றுக்கொண்டு, சுங்க விசாரணையின்போது அதன் பொறுப்பை முகாமைத்துவப் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டிருந்ததாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மேலும், சுங்கத் திணைக்களத்தின் தீர்ப்பை வேறு எந்தவொரு நீதிமன்றத்திலும் அல்லது மன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்தப் போவதில்லை என்றும் அவர் விசாரணையின்போது தெரிவித்திருந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
சுங்கத் திணைக்களத்தின் தீர்ப்பு சட்டவிரோதமானது, நியாயமற்றது அல்லது சட்டரீதியான தவறுகளைக் கொண்டது என்பதை மனுதாரர்கள் நிரூபிக்கத் தவறியுள்ளதாகத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், சுங்கத் திணைக்களத்தின் ஆரம்பத் தீர்ப்பினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட சில தரப்பினரையும் மனுவில் இணைக்கத் தவறியுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
முகாமைத்துவப் பணிப்பாளர் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டமை மற்றும் சுங்கத் திணைக்களத்தின் உத்தரவைச் சவாலுக்கு உட்படுத்தப் போவதில்லை என உறுதியளித்தமை உள்ளிட்ட முக்கியமான தகவல்களையும் தனது சத்தியக்கடதாசியில் அவர் வெளிப்படுத்தத் தவறியுள்ளதாக நீதிமன்றம் மேலும் தெரிவித்தது.
இதனடிப்படையில், ஹிங்குரானா டிஸ்டிலரீஸ் நிறுவனத்தின் ரிட் மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அரசாங்கத்துக்கு ஒரு மில்லியன் ரூபா வழக்குச் செலவைச் செலுத்துமாறும் உத்தரவிட்டது.
நீதிபதி பி. சசி மகேந்திரன் வழங்கிய தீர்ப்புடன் நீதிபதி ஆதித்யா பட்டபெந்திகே இணக்கம் தெரிவித்தார்.