அடுத்த ஆண்டுக்குள் 'ரோபோ மூளை' புரட்சி: சீன நிறுவனம் சாதனை!
மனித உருவ ரோபோக்கள் (Humanoid Robots) வாய்மொழி உத்தரவுகளைப் புரிந்து கொண்டு, பெரும்பாலான பொதுவான பணிகளைச் செய்யும் தொழில்நுட்ப மைல்கல்லை எதிர்வரும் ஆண்டிலேயே எட்டக்கூடும் என ரோபோக்களுக்கான செயற்கை நுண்ணறிவு மூளையை உருவாக்கும் முன்னணி சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக சீனாவில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்கள், ஓடுவது, நடனமாடுவது மற்றும் கட்டளைகளுக்கு ஏற்ப காற்றில் கரணமடிப்பது போன்ற வன்பொருள் (Hardware) சார்ந்த திறன்களில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, ரோபோக்களின் புத்தி கூர்மையை தீர்மானிக்கும் மென்பொருள் (Software) மற்றும் அவற்றை பொருளாதார ரீதியாகப் பயன்படக்கூடிய பணிகளில் ஈடுபடுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இந்தத் துறை ‘உருவகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு’ (Embodied AI) என்று அழைக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பெய்ஜிங்கில் உள்ள ‘ஸ்பிரிட் ஏ.ஐ’ (Spirit AI) நிறுவனத்தின் இணை நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான காவ் யாங் கருத்துத் தெரிவிக்கையில், “முழுமையான ரோபோ உருவாக்கத் தொடரில் ‘மூளை’ப் பகுதியே இன்னும் பலவீனமான இணைப்பாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் 2022-ஆம் ஆண்டு சாட்ஜிபிடி (ChatGPT) ஏற்படுத்திய திருப்புமுனையைப் போல, ரோபோட்டிக்ஸ் துறையிலும் ஒரு பெரிய தொழில்நுட்பப் பாய்ச்சலை உருவாக்க ஆய்வாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இது குறித்து காவ் யாங் கூறுகையில், “நாங்கள் 2027-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் ‘ஜிபிடி-3.0’ (GPT-3.0) போன்றதொரு மைல்கல்லை எட்டுவோம் என எதிர்பார்க்கிறோம். அப்போது நீங்கள் ரோபோவிடம் இயல்பான மொழியில் பேச முடியும். அது அந்தப் பணியை நிறைவேற்றத் தேவையான தொடர்ச்சியான உடலியல் செயல்களைச் சரியாகச் செய்து முடிக்கும்” என்றார்.
இந்த தொழில்நுட்பத்திற்காக, நாடு முழுவதும் சுமார் 1,000 பணியாளர்களை இந்நிறுவனம் ஈடுபடுத்தியுள்ளது. அவர்கள் வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் தரவு சேகரிப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு பணிகளை மேற்கொள்கின்றனர். மனிதர்கள் சூழலுக்கு ஏற்ப எவ்வாறு இயங்குகிறார்கள் என்பது தொடர்பான இந்தத் தரவுகள் ரோபோக்களுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
பெய்ஜிங் அலுவலகத்தில் உள்ள தரவுப் பயிற்சி மையத்தில், சென்சார்கள் பொருத்தப்பட்ட இளைஞர்கள் குளிர்சாதனப் பெட்டிகளைத் திறப்பது, பூட்டுகளைத் திறப்பது மற்றும் கத்தியால் காய்கறிகளை வெட்டுவது போன்ற செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்து பயிற்சி அளிக்கின்றனர்.
வடிவமைக்கப்பட்ட வரவேற்பறைச் சூழல்களில் எளிய பணிகளை 90 சதவீதத் துல்லியத்துடன் ஸ்பிரிட் ஏ.ஐ நிறுவனத்தின் ரோபோக்கள் செய்து முடித்துள்ளன. இருப்பினும், தொழில்துறைப் பயன்பாடுகளுக்கு அடுத்த 1 முதல் 2 ஆண்டுகள் ஆரம்பக் கட்டமாக இருக்கும் என்றும், வணிகச் சேவை மையங்களில் எளிய பணிகளுக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என்றும், வீடுகளுக்குள் ரோபோக்கள் நுழைவது மிகக் கடினமான சவால் என்றும் சிங்க்ஹுவா பல்கலைக்கழகத்தின் ரோபோட்டிக்ஸ் உதவிப் பேராசிரியராகவும் உள்ள காவ் யாங் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது ஸ்பிரிட் ஏ.ஐ நிறுவனம் தயாரித்த ‘மோஸ்1’ (Moz1) என்ற சக்கரங்கள் பொருத்தப்பட்ட மனித உருவ ரோபோக்கள், சி.ஏ.டி.எல் (CATL) பேட்டரி தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஜே.டி.டொம்காம் (JD.com) போன்ற முன்னணி வணிக நிறுவனங்களின் உற்பத்திப் பாதைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த 300 பணியாளர்களைக் கொண்ட நிறுவனம், இதுவரை 670 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக நிதியைத் திரட்டியுள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 20 பில்லியன் யுவான் (சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஆகும்.
இருப்பினும், பாட்டில் மூடிகளைக் கழற்றுவது போன்ற நுணுக்கமான இயக்கங்கள் மற்றும் இதுவரை பழக்கமில்லாத புதிய பணிகளைச் செய்வதில் இன்னமும் சவால்கள் நீடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கணினி வழி போலிச் சூழல்களுக்குப் பதிலாக, நிஜ உலகத் தரவுகளைக் கொண்டே இந்நிறுவனம் ரோபோ மூளைகளுக்குப் பயிற்சியளிக்கிறது.
மேலும் அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்ற ஊடுருவல் சம்பவங்களைத் தொடர்ந்து ஏ.ஐ (AI) வளர்ச்சியைக் கட்டுப்படுத்தக் கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், இயற்பியல் உலகில் இயங்கும் ரோபோக்களால் இப்போதைக்கு உடனடி ஆபத்து எதுவுமில்லை என்றும், எதிர்காலப் பாதுகாப்பிற்கான அவசரகால பிரேக்கிங் முறைகள் இவற்றில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.