LAUGFS எரிவாயு விலை 35 சதவீதத்திற்கும் மேல் அதிகரிப்பு
LAUGFS Gas நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இன்று (13) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 4,965 ரூபாவிலிருந்து 6,740 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளை, 5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 732 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 1,988 ரூபாவிலிருந்து 2,720 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் திரவப் பெற்றோலிய வாயுவின் (LPG) விலைகள் அதிகரித்துள்ளமையும், அதன் காரணமாக இலங்கைக்கு எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான செலவுகள் உயர்ந்துள்ளமையும் இந்த விலை அதிகரிப்புக்குக் காரணம் என LAUGFS Gas நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வர்த்தகப் பாவனையாளர்களுக்கு தடையின்றி எரிவாயுவை விநியோகிப்பதில் நிறுவனம் தொடர்ந்தும் உறுதியுடன் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் விலைத் திருத்தங்கள் சர்வதேச LPG சந்தை விலைகளுக்கு அமைய தீர்மானிக்கப்படும் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எரிவாயு கிடைக்கும் நிலைமை மற்றும் மாவட்ட ரீதியான விலைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள 1345 என்ற நிறுவனத்தின் அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.