சிலாபத்தில் 1.6 தொன்னுக்கும் அதிகமான சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு – நால்வர் கைது!
சிலாபம், தலவில வெல்ல பகுதியில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட 1,597 கிலோகிராம் 200 கிராம் பீடி இலைகளைப் பொலிஸார் மற்றும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 12ஆம் திகதி இரவு, தொடுவாவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 22 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 799 கிலோகிராம் 900 கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, குறித்த பீடி இலைகளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் லொறி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடுவாவ, இரணவில மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27, 47, 53 மற்றும் 63 வயதுடையவர்களாவர். இவர்களில் இருவர் நேரடியாகச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்றும், ஏனைய இருவர் அவர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸாரின் சுற்றிவளைப்பு தொடர்பில் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடலில் மிதந்த நிலையில் காணப்பட்ட மேலும் 20 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 797 கிலோகிராம் 300 கிராம் பீடி இலைகளை அத்திணைக்கள அதிகாரிகள் மீட்டுப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடுவாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.