இலங்கையின் மருந்துத் தேவையில் 25 வீதத்தைப் பூர்த்தி செய்ய இலக்கு – பிங்கிரியவில் பிரம்மாண்ட மருந்துத் தொழிற்சாலை
இலங்கையின் மிகப்பெரிய மேற்கத்திய மருந்து உற்பத்தித் தொழிற்சாலையாக உருவாக்கப்பட்டு வரும் பிங்கிரிய முதலீட்டு வலயத்திலுள்ள தொழிற்சாலை, நாட்டின் மொத்த மருந்துத் தேவையில் 25 வீதம் வரை பூர்த்தி செய்யும் இலக்குடன் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளை சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் இந்தத் திட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சின் தகவலின்படி, Synergy Pharmaceuticals Corporation (Private) Limited நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இந்தத் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில், சுகாதாரப் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி அண்மையில் தொழிற்சாலைக்கு விஜயம் செய்து, நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம், நவீன இயந்திரங்கள் பொருத்தப்படும் நடவடிக்கைகள் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆய்வுகூடத்தின் (R&D Laboratory) கட்டுமானப் பணிகள் குறித்து ஆராய்ந்தார்.
இந்தத் தொழிற்சாலையில் மாத்திரைகள், காப்ஸ்யூல்கள், ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்துகள், புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் ஹோர்மோன் மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய மருந்துகளை சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம் இலங்கையின் உள்நாட்டு மருந்து உற்பத்தித் திறன் மேலும் வலுப்பெறுவதுடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளை வெளிநாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, எஞ்சியுள்ள நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்தி, வணிக ரீதியிலான உற்பத்தியை ஆரம்பிப்பதற்குத் தேவையான நிர்வாக மற்றும் நிறுவன ரீதியான ஒத்துழைப்புகளை அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என உறுதியளித்தார்.
மேலும், தொழிற்சாலையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த விஜயத்தில் Synergy Pharmaceuticals நிறுவனத்தின் நிர்வாகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.