இலங்கைக்கு 50 மருத்துவப் பரிசோதனை நிலையங்களை வழங்க இந்தியா ரூ.225 மில்லியன் நிதியுதவி
இலங்கைக்கு 50 மருத்துவப் பரிசோதனை நிலையங்களை (Medical Kiosks அல்லது Health ATMs) வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் 225 மில்லியன் ரூபாய் வரையிலான நிதியுதவியை அறிவித்துள்ளது.
‘டித்வா’ (Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கான மறுசீரமைப்பு மற்றும் மீள்கட்டுமானப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவின் ஒரு பகுதியாக இந்த உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா மற்றும் இலங்கை சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையிலான இருதரப்புச் சந்திப்பின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 11ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற முதலாவது BIMSTEC சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் பக்க நிகழ்வாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த மருத்துவப் பரிசோதனை நிலையங்கள் மூலம் இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்த முடியும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கிராமப்புறங்கள் மற்றும் போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காத பிரதேசங்களில் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கு இந்த நிலையங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கும், அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளை இலகுவாக மேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்துவதன் மூலம் அரச வைத்தியசாலைகள் மீதான நோயாளர் சுமையைக் குறைப்பதற்கும் இந்தத் திட்டம் பங்களிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டித்வா’ சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையில் முன்னெடுக்கப்படும் புனரமைப்பு மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான உதவிகளின் ஒரு பகுதியாகவே இந்த 225 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.