கல்வித்துறைக்கு வரலாற்றில் அதிகூடிய 749 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – பிரதமர் ஹரிணி
இலங்கையின் கல்வித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய முதலீடாக, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கல்வித்துறைக்கு 749 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் இன்று (13) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த நிதி ஒதுக்கீடானது அரசாங்கத்தின் மொத்த செலவினத்தில் 12 சதவீதத்துக்கும் அதிகமாகும் எனக் குறிப்பிட்டார்.
கல்வித்துறையை நவீனமயப்படுத்தும் நடவடிக்கையின் கீழ், இதுவரை 4,570க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகளும், 6,000க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு இணைய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், 17 ஆண்டுகளாக மாற்றமின்றிக் காணப்பட்ட தேசிய கல்வியியல் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும், மகரகம தேசிய கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட மேலும் ஐந்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்போது நாட்டின் பொருளாதார நிலைமை குறித்தும் கருத்துத் தெரிவித்த பிரதமர், 2025ஆம் ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
2016ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அதிகூடிய வருடாந்த வெளிநாட்டு நேரடி முதலீடாக, 2025ஆம் ஆண்டில் இலங்கை சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், 2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாகவும், 2022ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 114 சதவீதமாகக் காணப்பட்ட மத்திய அரசாங்கத்தின் கடன் விகிதம் தற்போது குறைவடைந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், 2022ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 74.6 பில்லியன் ரூபா நட்டத்தைப் பதிவு செய்திருந்த 52 முக்கிய அரச நிறுவனங்கள் தற்போது இலாபமீட்டும் நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரச துறைக்கான ஆட்சேர்ப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், அரசியல் தலையீடுகள் இன்றி, வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான நடைமுறையின் ஊடாக சுமார் 40,000 பேர் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.
பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் கட்டத்திலிருந்து நீண்டகால பொருளாதார மாற்றத்தை நோக்கி இலங்கையை முன்னெடுத்துச் செல்வதையே 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இறுதியாக, நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து அரசியல் தரப்பினரும் உண்மைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஆக்கபூர்வமான அரசியல் கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் எனவும், அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அழைப்பு விடுத்தார்.