e-Court திட்டம்: 350 நீதிமன்றங்களுக்கு 1,050 உத்தியோகபூர்வ மின்னஞ்சல்கள்!
இலங்கையின் நீதித் துறையை விரைவாக டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள 350 நீதிமன்றங்களை உள்ளடக்கிய வகையில் 1,050 உத்தியோகபூர்வ மின்னஞ்சல் (Email) கணக்குகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கிலான 'e-Court' திட்டத்தின் கீழ் இந்த வசதிகள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி, குறித்த மின்னஞ்சல் கணக்குகள் courts.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையப் களத்தின் (Domain) கீழ் இயங்கும். மேலும், நீதித்துறை அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கும் இந்த உத்தியோகபூர்வ மின்னஞ்சல் வசதிகள் வழங்கப்படவுள்ளமை இத்திட்டத்தின் முக்கிய தேவையாகக் கருதப்படுகிறது.
கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்திட்டத்திற்கு அமைச்சரவையின் முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது வழக்குக் கோப்புகளை நிர்வகிப்பதை இலகுபடுத்தும் வகையில் மஜிஸ்திரேட் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்கள் ஆகியவற்றிற்கான டிஜிட்டல் அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக, நீதிமன்றங்களில் நிலவும் சுருக்கெழுத்தாளர்கள் பற்றாக்குறைக்குத் தீர்வாக, வாய்மொழி வாக்குமூலங்களை உடனடியாக எழுத்துவடிவ ஆவணங்களாக மாற்றும் குரல் வழி எழுத்து நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், நடைமுறையிலுள்ள சட்ட விதிகளுக்கு அமைவாக நீதிமன்ற நடவடிக்கைகளை இணையவழியில் (Online) நடத்துவதற்கு வசதியாக, காணொளி மாநாட்டு வசதிகளும் நீதிமன்றங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
பிரேரிக்கப்பட்டுள்ள இந்த 1,050 மின்னஞ்சல் கணக்குகளும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினால் தற்போது பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் அமைப்பின் மூலமே இயக்கப்படவுள்ளதுடன், குரல் வழி எழுத்து நுட்பம் மற்றும் காணொளி மாநாட்டு வசதிகளும் இதனுடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.