சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் மகிந்த கஹந்தகமவுக்கு தொடர்பு: விசாரணையில் அம்பலம்!
கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரான மகிந்த கஹந்தகம கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளில், டுபாய் (Dubai) உள்ளிட்ட வெளிநாடுகளில் இயங்கி வரும் இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் மாநகரசபை உறுப்பினரான மகிந்த கஹந்தகம, 'ஐஸ்' (ICE) போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார் என்ற தகவலின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இன்று (06) காலை கைது செய்யப்பட்டார். அவரது வசமிருந்த குறிப்பிடத்தகுந்தளவு ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, டுபாயில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து மகிந்த கஹந்தகம விருந்தொன்றில் கலந்துகொண்ட காணொளிப் பதிவுகளை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
அக்கலந்துரையாடலில் 'மோதர நிபுண' (Modara Nipuna) எனப்படும் பாதாள உலகக் குற்றவாளியின் சகோதரரான சதுர தில்ருக்ஷான் (Chathura Dilrukshan) மற்றும் 'கேசல்வத்தே தினுஷ' (Keselwatte Dinusha) ஆகிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் கஹந்தகம மிக நெருக்கமாக இருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், அங்கு குழுமியிருந்தவர்கள் கஹந்தகமவை "டாடா" (Dada) என அழைப்பதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
மேலும், 'இப்பாகமுவத்தே சுஜீ' (Ibbagewatte Sujee) எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரருடன் கஹந்தகம தொடர்புகளைப் பேணி வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன், இருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் விபரங்களையும் புலனாய்வுப் பிரிவினர் திரட்டியுள்ளனர். 'இப்பாகமுவத்தே சுஜீ'யிடம் இருந்து ஐஸ் போதைப்பொருளைப் பெற்றுக்கொண்ட கஹந்தகம, அதற்கான பணத்தை வழங்கத் தவறியதால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, மகிந்த கஹந்தகம வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் நுகேகொட பகுதியில் நடத்தப்பட்ட மற்றுமொரு சோதனையின் போது, இந்த போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 1,100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவைப் பெற்றுக்கொள்வதற்காக அவர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.