நெடுந்தீவு - யாழ்ப்பாண கடல் பாதையில் 150 பயணிகள் பயணிக்கும் புதிய படகு சேவை: அமைச்சரவை அனுமதி!
யாழ்ப்பாணப் பகுதிக்கும் நெடுந்தீவுக்கும் இடையிலான கடல்வழிப் போக்குவரத்து நெருக்கடிகளுக்குத் தீர்வாக, ஒரே நேரத்தில் சுமார் 150 பயணிகள் வரை ஏற்றிச் செல்லக்கூடிய புதிய படகு சேவையொன்றை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் ‘பிரஜா சக்தி’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும், நெடுந்தீவு போன்ற வெளித் தீவுகளுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்தில் நீண்டகாலமாகப் பல்வேறு சிரமங்கள் நிலவி வருகின்றன. தற்போது பயன்படுத்தப்படும் படகுகள் போதிய இடவசதியின்றி காணப்படுவதால், ஒரே நேரத்தில் அதிகளவிலான பயணிகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதில் கடும் சவால்கள் நிலவுகின்றன.
இந்நிலையிலேயே, குறித்த கடல்வழிப் போக்குவரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய பயணிகள் படகைச் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் புதிய கடல் படகானது, 'சீ-நோர்' அமைப்பினால் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதன் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகள், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும் 'நெடுந்தீவு அபிவிருத்திச் சங்கத்திடம்' ஒப்படைக்கப்படவுள்ளன.
மேலும், இந்தப் படகுச் சேவையின் மூலம் ஈட்டப்படும் வருமானம், நெடுந்தீவு அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட அப் பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இப் யோசனைக்கு அமைச்சரவை முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.