கொழும்பு வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ. 91 மில்லியன் செலவில் சாத்தியக்கூறு ஆய்வு
கொழும்பு நகரின் பிரதான வீதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு, 91.21 மில்லியன் ரூபாய் செலவில் சாத்தியக்கூறு ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தாமரைத் தடாக சந்திப்பு , துறைமுக அணுகல் மேம்பாலம் மற்றும் மெரைன் டிரைவ் இணைப்பு வீதி (Marine Drive Connector Road) ஆகியவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான முறையான வழிமுறைகளைக் கண்டறிவதற்கே இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக ஆலோசனைக் சேவை ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கு அமைவாக, 'எம்/எஸ் மாஸ்டர் ஹெலிஸ் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ்' என்ற நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
மதிப்புக்கூட்டு வரி (VAT) தவிர்ந்த இத்திட்டத்தின் மொத்தப் பெறுமதி 91.21 மில்லியன் ரூபாயாகும். இதில் உள்நாட்டுச் செலவினமாக 52.44 மில்லியன் ரூபாயும், வெளிநாட்டுச் செலவினமாக 122,859 அமெரிக்க டொலர்களும் உள்ளடங்குகின்றன.
முன்னதாக, இந்தச் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்கான ஆலோசனை நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் விருப்ப வெளிப்பாடு கோரப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுருக்கப் பட்டியலிடலின் அடிப்படையில், ஐந்து நிறுவனங்களுக்கு ஆலோசனையியல் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்நீண்டகால திட்டத்திற்கான முன்மொழிவுக்கே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.