மீசாலையில் உழவு இயந்திரம் மோதி சோகம்: 36 வயது பெண் உத்தியோகஸ்தர் சம்பவ இடத்திலேயே பலி!
யாழ்ப்பாணம், தென்மராட்சி – மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில், மூன்று பிள்ளைகளின் தாயாரான அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரியைச் சேர்ந்த 36 வயதான சோபிதா என்ற பெண்ணே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்தவராவார்.
இன்று பணி நிமித்தம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவேளை, மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் எதிரே வந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த குறித்த பெண், சம்பவ இடத்திலேயே தனது இன்னுயிரைத் துறந்தார்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த கொடிகாமம் பொலிஸார் விரைந்து சென்று உடலத்தைக் கைப்பற்றியதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.