2026 ஆம் ஆண்டின் அந்நியச் செலாவணி ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய குழு ஒப்புதல்
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழு (COPF), 2026 ஆம் ஆண்டின் 01 மற்றும் 02 ஆம் இலக்க அந்நியச் செலாவணி ஒழுங்குவிதிகள் மற்றும் அந்நியச் செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட கட்டளை ஆகியவற்றுக்குத் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடன் இடம்பெற்ற விரிவான கலந்துரையாடலைத் தொடர்ந்தே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீடுகள், புலம்பெயர்வோரின் சொத்துப் பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் அந்நியச் செலாவணிப் பாய்ச்சலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான முக்கிய சரத்துக்கள் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன. நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில் விதிக்கப்பட்டிருந்த தற்காலிகக் கட்டுப்பாடுகள், பொருளாதார நிலைமைகள் சீரடைந்து வரும் பின்னணியில் படிப்படியாகத் தளர்த்தப்படுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கி அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
புதிய ஒழுங்குவிதிகளின்படி, பட்டியலிடப்பட்ட கம்பனிகள் வெளிநாடுகளில் தமது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கான முதலீட்டு எல்லை, சுமார் ஆறு மாத காலத்திற்கு 0.75 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (USD 0.75 million) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லையை 2027 ஆம் ஆண்டில் தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பட்டியலிடப்படாத கம்பனிகளுக்கான முதலீட்டு எல்லை 0.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (USD 0.2 million) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமான தொகையைப் பரிமாற்றம் செய்வதற்கு, கம்பனிகளின் நிதிநிலை அறிக்கையை மதிப்பீடு செய்து, நாணய வாரியத்தின் சிறப்பு அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், புலம்பெயர்வோருக்கான கொடுப்பனவு நடைமுறைகள், ஏற்றுமதி வருமானத்தை நாட்டிற்கு மீளக்கொண்டு வருதல், சட்டவிரோதப் பணப்பரிமாற்றங்களைக் கண்காணித்தல் மற்றும் சுங்கத் திணைக்களம் - வங்கிகள் இடையிலான தரவுகளை ஒருங்கிணைத்தல் ஆகிய விடயங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, வெளிநாட்டுக்கு நிதிச் செல்லும் வழிகளில் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது, உள்நாட்டு வணிக நிறுவனங்களை ஊக்கமிழக்கச் செய்வதோடு, நாட்டிற்குள் வரும் அந்நியச் செலாவணிப் பாய்ச்சலையும் எதிர்பாராத விதமாகக் குறைத்துவிடும் என எச்சரித்தார்.