நோயாளிகளின் வலியை உணரும் மருத்துவர்களும் மனிதநேயமிக்க பொறியியலாளர்களும் நாட்டிற்குத் தேவை: பிரதமர் ஹரிணி
நோயாளிகளின் வலியை உணரும் மருத்துவர்களும் மனிதநேயமிக்க பொறியியலாளர்களும் நாட்டிற்குத் தேவை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
அழகியல் கல்வியானது இந்த இலக்கை அடைவதில் முக்கிய பங்காற்றுகிறது என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், திறமையான கலைஞர்கள், நோயாளிகளின் துன்பத்தைப் புரிந்து கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் வலுவான மனிதநேயக் குணங்களைக் கொண்ட பொறியியலாளர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும் தெரிவித்தார்.
தென் மாகாணத்தில் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து வளர்க்கும் நோக்கில், அனைத்து அழகியல் பாடங்களையும் வழங்கும் சிறப்புப் பள்ளியாகக் காலி, படதுவ ஸ்ரீ ரத்தனஜோதி வித்யாலயாவை திறந்து வைக்கும் நிகழ்வில், செப்டம்பர் 29ஆம் திகதி கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர்:
“கல்வி என்பது வெறும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதோ அல்லது சான்றிதழ்களைச் சேகரிப்பதோ மட்டும் அல்ல. சமூகத்தைப் புரிந்து கொண்டு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய, உணர்வுப்பூர்வமான மற்றும் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதே கல்வியின் உண்மையான நோக்கமாகும்.
எதிர்வரும் கல்வி மறுசீரைமைப்புகளானது பொருளாதாரத்துடன் தொடர்புடைய புதிய துறைகளை அறிமுகப்படுத்தும். இதன் மூலம் டிஜிட்டல் கலை , புதிய ஊடகங்கள், திரைப்படம், இசைத் தொழில்நுட்பம் மற்றும் ஆக்கபூர்வமான தொழில்களில் இலங்கைச் சிறுவர்கள் உலகளாவிய வாய்ப்புகளைப் பெற வழிவகை செய்யப்படும்,” எனக் குறிப்பிட்டார்.
மேலும், 2ஆம் மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கான கல்வி மறுசீரைமைப்புகள் அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும் என அறிவித்த பிரதமர், 13 ஆண்டுகால பாடத்திட்டக் கட்டமைப்பு, தேசியக் கல்வி ஆணைக்குழுவின் கருத்துருத் தாள் மற்றும் மாணவர் மதிப்பீட்டு முறைமை ஆகியவற்றிற்கு செப்டம்பர் 28ஆம் திகதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயல்பாட்டில் கல்விக்கு முதன்மை முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றார். அதேபோல், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (COPE) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நிஷாந்த சமரவீர உரையாற்றுகையில், விரிவான தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமுறையை உருவாக்க கல்வித் துறையை அரசாங்கம் புதிய மாதிரிகளை நோக்கி நகர்த்தி வருவதாகத் தெரிவித்தார்.