பாடசாலை நவீனமயமாக்கல் உலக வங்கித் திட்டம்: பாராளுமன்ற உப குழு தீவிர பரிசீலனை
பாடசாலைகளில் நிலவும் பௌதிக வளப் பற்றாக்குறைகள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற உப குழு, கல்வி அமைச்சினால் உலக வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொதுக் கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விரிவாகக் கேட்டறிந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க தலைமையில் அண்மையில் கூடிய உப குழுவின் கூட்டத்திலேயே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், இத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து உப குழுவுக்கு விளக்கமளித்தனர்.
இதன்போது, பாடசாலைகளின் உட்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய உப குழு, திட்டத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் அடங்கிய விரிவான அறிக்கை ஒன்றை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
குறிப்பாக, பாடசாலைகளில் நிலவும் சுகாதார வசதிகள் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை உப குழு சுட்டிக்காட்டியது. இதில் குடிநீரின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், பாடசாலைகளுக்குத் தேவையான தொலைத்தொடர்பு வசதிகளை வழங்குதல் மற்றும் மாதிரி ஆரம்பப் பாடசாலைகளை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தின் போது விரிவாகக் குழுவின் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.