2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தனியார் துறைக்கான கடன் வழங்கல் ரூ.2.1 டிரில்லியனாக அதிகரிப்பு
இலங்கையில் 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2.1 டிரில்லியனாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.1.9 டிரில்லியனாகக் காணப்பட்ட நிலையில், இவ்வாண்டு அது அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (COPF) அண்மைய கூட்டத்தில் இந்தத் தகவல்கள் முன்வைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, தனியார் துறைக்கு வழங்கப்பட்ட மொத்தக் கடன்களில் சுமார் 74 சதவீதமானவை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், வங்கிகளின் கடன் வழங்கும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து குழு உறுப்பினர்கள் கவலை வெளியிட்டனர்.
குறுகிய காலக் கடன்களின் பங்கு 42 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன், நீண்டகாலக் கடன்களின் பங்கு 35 சதவீதத்திலிருந்து 29 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
வங்கிகளால் வழங்கப்படும் கடன்கள் மூலதன உருவாக்கம், புதிய முதலீடுகள் மற்றும் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துதல் போன்ற பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான துறைகளைச் சென்றடைகின்றனவா என்பது குறித்தும் குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
வீடமைப்புக்கான அடமானக் கடன்கள் மற்றும் வாகனக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன் பிரிவுகளின் வளர்ச்சி தொடர்பிலும் அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்பட்டது.
இதற்கிடையில், இலங்கையின் நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த வர்த்தகம், தொழிலாளர் மற்றும் காணி ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
மேலும், மனித மூலதனத்தை மேம்படுத்துதல், உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் ஆகியவற்றின் முக்கியத்துவமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை, இலங்கையின் வங்கித் துறையின் ஸ்திரத்தன்மை மேம்பட்டுள்ளதாக மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கிகளின் மூன்றாம் நிலை செயல்படாத கடன்களின் (Stage 3 Non-Performing Loans) விகிதம் 9.7 சதவீதத்திலிருந்து 8.8 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன், நாட்டின் வங்கிக் கட்டமைப்பில் மூலதன மற்றும் பணப்புழக்க நிலைகள், ஒழுங்குமுறை அமைப்புகளால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சத் தேவைகளை விடவும் உயர்ந்த மட்டத்தில் தொடர்வதாகவும் மத்திய வங்கி அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.