வெளிநாடுகளால் கைது செய்யப்படும் இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை 2026இல் 40ஆகக் குறைவு
வெளிநாடுகளால் கைது செய்யப்படும் இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இதுவரை 40ஆகக் குறைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2025ஆம் ஆண்டில் 111 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் இதுவரை அந்த எண்ணிக்கை 40ஆகக் குறைந்துள்ளது.
அதேபோன்று, வெளிநாடுகளால் தடுத்து வைக்கப்பட்ட இலங்கை மீன்பிடிப் படகுகளின் எண்ணிக்கையும் 2025ஆம் ஆண்டில் 19ஆகக் காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை ஏழாகக் குறைந்துள்ளது.
மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு எழுத்துமூலம் வழங்கிய பதிலிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 2024ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 165 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 30 மீன்பிடிப் படகுகளும் வெளிநாடுகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுதல் மற்றும் மாலைதீவு கடற்பரப்பிற்குள் நுழைவதற்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளாமை ஆகியவை இத்தகைய கைதுகளுக்கான முக்கிய காரணங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்காக இந்தியா மற்றும் மாலைதீவுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்துதல், மீனவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மாலைதீவுடன் விசேட உடன்படிக்கையொன்றை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் முன்மொழியப்பட்டுள்ளன.
மேலும், கடல் எல்லைகளைத் துல்லியமாகக் கண்காணிப்பதற்காக GPS மற்றும் கப்பல் கண்காணிப்பு முறைமை (VMS) கருவிகளைப் பயன்படுத்துவதும் மீனவர்கள் வெளிநாடுகளால் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.