கொழும்பு தங்க நகைக் கடைகளில் நூதன முறையில் திருட்டு – 37 வயதுடைய சந்தேகநபர் கைது
கொழும்பிலுள்ள தங்க நகைக் கடைகளில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 2,800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் 23ஆம் திகதி காலி முகத்திடல் பகுதியில் வைத்து கோட்டை பொலிஸாரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள நகைக் கடைத் தொகுதிகளைப் பல நாட்களாகக் கண்காணித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
கோட்டை, துறைமுகம் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள நகைக் கடைகளையே சந்தேகநபர் இலக்குவைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரித்தானியப் பிரஜை ஒருவரைப் போன்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, தங்க நகைகளைக் கொள்வனவு செய்ய வந்த வெளிநாட்டவர் எனக் கடை ஊழியர்களிடம் அறிமுகமாகியுள்ளார். இதன்போது நகைகளைப் பார்வையிடுவது போன்று நடித்து, ஊழியர்களை ஏமாற்றி நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆறு மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய சந்தேகநபர், தனது வெளிநாட்டுத் தோற்றம் மற்றும் நடத்தையைப் பயன்படுத்தி கடை ஊழியர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் பல சந்தர்ப்பங்களில் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட நகைகளில் அரைச் சொவரன் நிறையுடைய, 68 சிறிய வைரங்கள் பதிக்கப்பட்ட ரோஸ் கோல்ட் மோதிரம், இளஞ்சிவப்பு நிற நீலக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க மோதிரம் உள்ளிட்ட பல்வேறு நகைகள் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட நகைகளைப் பொரளை அல்லாது, பேட்டையில் உள்ள ஹெட்டி வீதியிலுள்ள தங்க நகைக் கடைகளில் சந்தேகநபர் விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணைகளின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளில், சந்தேகநபர் இலங்கையர் என்பதும், அவரது தாயார் பிரித்தானியப் பிரஜை என்பதும் தெரியவந்துள்ளது. அவர் கல்கிசை பகுதியில் வாடகை அறையொன்றில் தங்கியிருந்துள்ளார்.
மேலும், திருட்டு மூலம் பெற்ற பணத்தை போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காகச் செலவிட்டுள்ளதாகவும், அவர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி, கட்டுகஸ்தோட்டை மாப்பனாவத்துர பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.