ரணில் – அனுர வெளிநாட்டுப் பயணச் செலவுகளில் பெரும் வித்தியாசம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது 26 மாத ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட 33 வெளிநாட்டுப் பயணங்களுக்காக 1,010 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதேபோன்ற காலப்பகுதியில் மேற்கொண்ட எட்டு வெளிநாட்டுப் பயணங்களுக்காக 31.7 மில்லியன் ரூபா மட்டுமே செலவிட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நவம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலை வெளியிட்ட அவர், ரணில் விக்கிரமசிங்கவின் 33 வெளிநாட்டுப் பயணங்களிலும் மொத்தம் 421 பேர் உடன் சென்றதாகக் குறிப்பிட்டார்.
2022 செப்டெம்பர் 17ஆம் திகதி அவர் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட பயணம் முதல், 2024 ஜூன் 8ஆம் திகதி இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வரையிலான காலப்பகுதியில் இந்தச் செலவுகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கு மாறாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதல் 26 மாத ஆட்சிக் காலத்தில் எட்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும், அவற்றுக்கான மொத்தச் செலவு 31.7 மில்லியன் ரூபாவாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த வெளிநாட்டுப் பயணங்களுடன் தொடர்புடைய மேலதிக கொடுப்பனவுகளையோ அல்லது ஒன்றிணைக்கப்பட்ட கொடுப்பனவுகளையோ தற்போதைய ஜனாதிபதி கோரிப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.