புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்திக்கு இந்தியா 600 மில்லியன் ரூபா நிதியுதவி
புத்தளம் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபாவை நிதியுதவியாக வழங்கவுள்ளது.
இதற்கமைய, புத்தளம் ஆதார வைத்தியசாலையில் ஆறு மாடிகளைக் கொண்ட புதிய கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தின் முதல் மூன்று மாடிகளை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டடத்தில் அவசர விபத்துப் பிரிவு (Accident and Emergency Unit) நிறுவப்படவுள்ளதுடன், மொத்தம் 8,640 சதுர மீற்றர் பரப்பளவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தை நான்கு வருடங்களுக்குள் நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கட்டடத்தில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகள், குறுகிய கால தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான பிரிவு, இரத்த வங்கி, நோயறிதல் மற்றும் ஆய்வக வசதிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இதற்கான நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.