2024–2026 காலப்பகுதியில் சீனாவின் பயிற்சித் திட்டங்களால் 2,481 இலங்கை அரச அதிகாரிகள் பயன்
சீன அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஊடாக, 2024ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 2,481 இலங்கை அரச அதிகாரிகள் பயனடைந்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்வு (China Aid Training Alumni Reception) நவம்பர் 20ஆம் திகதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் 380 பயிற்சி முயற்சிகள் ஊடாக இலங்கை அரச அதிகாரிகளின் தொழில்சார் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2026ஆம் ஆண்டில் மாத்திரம் 44 பல்தரப்பு மற்றும் 13 இருதரப்புப் பயிற்சித் திட்டங்கள் ஊடாக 700இற்கும் மேற்பட்ட அரச அதிகாரிகள் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் பயிற்சித் திட்டங்கள் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் (ERD) ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சீன வர்த்தக அமைச்சகத்தின் (MOFCOM) கீழ், சீனாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கான புலமைப்பரிசில் வாய்ப்புகள் இலங்கை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
டிஜிட்டல் தொழில்நுட்பம், புத்தாக்கம், தொழில்துறை அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நவீனமயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் சீனா அடைந்துள்ள முன்னேற்றங்கள், இலங்கையின் பொருளாதார மீட்சி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் அரச துறையின் நவீனமயமாக்கல் ஆகியவற்றுக்கு முக்கியமான படிப்பினைகளை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயிற்சிகளில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை விட, அங்கு பெற்றுக்கொள்ளும் அறிவு மற்றும் திறன்களை நடைமுறையில் பயன்படுத்துவதே உண்மையான வெற்றியாகும் என வலியுறுத்திய பிரதி அமைச்சர், அரச சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், நிறுவனங்களை வலுப்படுத்தவும், தேசிய அபிவிருத்தியை முன்னெடுக்கவும் அந்த அறிவைப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், பயிற்சிகளில் பங்கேற்ற அதிகாரிகள் தாம் பெற்றுக்கொண்ட அறிவைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் தூதுவர்களாகவும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் பாலங்களாகவும் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் மனித வள மேம்பாட்டிற்கும் தொழில்சார் பயிற்சிகளுக்கும் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கி வரும் சீன அரசாங்கம், இலங்கைக்கான சீனத் தூதரகம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.