இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு – பொதுமக்களுக்கு சுகாதார எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, சுகாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடியவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அடுத்த சில நாட்களுக்கு காற்றின் தரம் சற்றே ஆரோக்கியமற்ற நிலையில் தொடரக்கூடும் என்றும் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
இன்று (20) வெளியிடப்பட்ட அறிக்கையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள காற்றின் தரக் கண்காணிப்பு நிலையங்களில் PM2.5 மற்றும் PM10 உள்ளிட்ட நுண்துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளிலும், அநுராதபுரம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு, கண்டி மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வெளியில் இருந்து வீசும் காற்றோட்டங்கள் வளிமண்டலத்திற்குள் அதிகளவிலான நுண்துகள்களைக் கொண்டு வருவதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் காற்றுத் தரச் சுட்டெண்ணின் (Air Quality Index) அடிப்படையில், தற்போதைய காற்றின் தரம் சற்றே ஆரோக்கியமற்ற நிலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், குறிப்பாக சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் உள்ளிட்ட சுகாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, N95 வகை முகக்கவசங்களை அணியுமாறும், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுகாதாரப் பரிந்துரைகளை தேசிய காற்றுத் தர இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வளிமண்டல நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், காற்றின் தரத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.