15 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் வரி அதிகாரிக்கு சிறைத்தண்டனை
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முன்னாள் மதிப்பீட்டு அதிகாரி ஒருவருக்கு 16 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனினும், விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவர் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இந்தத் தீர்ப்பை வழங்கியதுடன், குற்றவாளியின் குடியியல் உரிமைகளை ஏழு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தியும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு, அனுராதபுரம் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றிய காலத்தில், வர்த்தகர் ஒருவரின் வருடாந்த வரி மதிப்பீட்டைக் குறைத்துக் கொடுப்பதற்காக 400,000 ரூபாவை இலஞ்சமாகக் கோரியதுடன், பின்னர் 375,000 ரூபாவைப் பெற்றுக்கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC), குறித்த முன்னாள் அதிகாரிக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.
நீண்டகாலமாக இடம்பெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், நான்கு குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், குற்றவாளியின் முதிர்ந்த வயது மற்றும் மருத்துவப் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, அனைத்து தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனால், அவர் அனுபவிக்க வேண்டிய மொத்த சிறைத்தண்டனை நான்கு ஆண்டுகளாகக் குறைந்துள்ளது.
மேலும், 375,000 ரூபா மற்றும் 20,000 ரூபா என இரண்டு தனித்தனி அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் செலுத்தத் தவறினால் மேலதிகமாக 14 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தண்டனை அறிவிப்பின்போது, குற்றவாளி 40 ஆண்டுகள் அரச சேவையில் பணியாற்றியவர் என்றும், தற்போது பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவரது தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனைக் கருத்திற்கொண்டு தண்டனையில் கருணை காட்டுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், அரச அதிகாரிகளிடையே நிலவும் ஊழல் ஒரு பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், ஏனைய அதிகாரிகளுக்கும் எச்சரிக்கையாக அமையும் வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நீதிபதி, அரச வருமானத்தைச் சேகரிக்கும் பொறுப்பைக் கொண்ட உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் இலஞ்சம் பெறுவது சாதாரணமாகக் கருதப்பட முடியாத பாரதூரமான குற்றம் எனத் தெரிவித்தார்.
அத்துடன், முன்னாள் அதிகாரியின் குடியியல் உரிமைகள் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு அறிவிக்குமாறும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலஞ்சம் பெற்ற சம்பவம் இடம்பெற்று சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.