ஹெய்ட்டியில் கும்பல்களுக்கு எதிரான வெற்றிகரமான நடவடிக்கை: இலங்கைப் படையினருக்கு பிரதமர் பாராட்டு
ஹெய்ட்டியில் ஆயுதக் கும்பல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, அங்கு சர்வதேச கும்பல் ஒடுக்கல் படையின் (GSF) கீழ் பணியாற்றும் இலங்கைப் படையினருக்கு ஹெய்ட்டி பிரதமர் அலிக்ஸ் டிடியர் பில்ஸ்-எய்மே பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 15ஆம் திகதி ஹெய்ட்டியின் ஆர்டிபோனைட் பிராந்தியத்தில், ஹெய்ட்டி தேசிய பொலிஸாருடன் (PNH) இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குரோஸ்-மோர்ன் பகுதியில் அமைந்துள்ள திப்வாடோம் மற்றும் கார்னிஃபிஸ் ஆகிய இடங்களில் இயங்கி வந்த 'கொகோராட் சான் ராஸ்' (Kokorat San Ras) ஆயுதக் கும்பலின் மறைவிடங்களைக் குறிவைத்து அதிகாலை வேளையில் இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, கும்பல் உறுப்பினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தேவாலயம் மற்றும் பாடசாலை ஆகியவற்றை கூட்டுப் படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.
மேலும், துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதுடன், வீதிப் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மற்றும் அகழிகளும் அகற்றப்பட்டன.
குறிப்பாக, பல ஆண்டுகளாகத் தடைப்பட்டிருந்த தேசிய நெடுஞ்சாலை இலக்கம் 5இன் போக்குவரத்தை மீண்டும் சீரமைப்பதற்கும் இந்த நடவடிக்கை வழிவகுத்துள்ளது.
இந்த வெற்றிகரமான நடவடிக்கை தொடர்பாக தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் கருத்துத் தெரிவித்த ஹெய்ட்டி பிரதமர் அலிக்ஸ் டிடியர் பில்ஸ்-எய்மே, ஹெய்ட்டி தேசிய பொலிஸார், சர்வதேச கும்பல் ஒடுக்கல் படையினர் மற்றும் இலங்கைப் படையினர் இணைந்து முன்னெடுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார்.
போர்ட்-ஓ-பிரின்ஸ், கோனாய்வ்ஸ் மற்றும் எஸ்ட்ரெல்லா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இலங்கைப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கவச வாகனங்கள் மூலம் ரோந்துப் பணிகளை முன்னெடுத்தல், முக்கிய விநியோகப் பாதைகளைப் பாதுகாத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கு உள்ளூர் அதிகாரிகளுக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், நாட்டில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் இலங்கைப் படையினர் பங்களிப்பு வழங்கி வருகின்றனர்.