‘ஹஸ்தி சேனா’ நடவடிக்கை: கலாவெவ வடக்கில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் வனவிலங்குகளின் எச்சங்கள் மீட்பு!
‘ஹஸ்தி சேனா’ நடவடிக்கையின் கீழ், கலாவெவ வடக்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது பல்வேறு ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் வனவிலங்குகளின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தினரும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
சட்டவிரோத வேட்டையாடல் நடவடிக்கைகளைத் தடுப்பதுடன், வனவிலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள், தோட்டாக்கள், வெடிமருந்துப் பொடி, விலங்குகளைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கண்ணிகள் மற்றும் வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட உணவுப் பொறிகளான 'ஹக்கா பட்டாஸ்' ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், முயல் இறைச்சி மற்றும் மான் கொம்புகளும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
காட்டு யானைகளைப் பாதுகாப்பதையும், மனித – யானை மோதல்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் ‘ஹஸ்தி சேனா’ திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோத வேட்டையாடல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இவ்வாறான கூட்டுச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.