ஹட்டன் நகரில் அனுமதியற்ற கடைகள் அகற்றம் – வியாபாரிகள், நகரசபை அதிகாரிகள் இடையே முறுகல்
ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஹட்டன் – டிக்கோயா நகரசபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி, இன்று (19) ஹட்டன் நகரில் உள்ள சந்தை வளாகம், ஹட்டன் சக்தி மண்டபம் மற்றும் நகரின் நடைபாதைகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த அனுமதியற்ற வியாபார நடவடிக்கைகள் மற்றும் கட்டுமானங்களை அகற்ற நகரசபை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பில் நகரசபையினால் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வியாபாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அந்த அறிவித்தலுக்கு அமைய ஆக்கிரமிப்புகளை அகற்றாத நிலையில், அவற்றை அகற்ற நகரசபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோது, அனுமதியற்ற வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
நீண்டகாலமாக அனுமதியற்ற முறையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள், தங்களுக்கு வியாபாரம் செய்வதற்கு மாற்று இடமொன்றை வழங்கிய பின்னரே, தங்களது கட்டுமானங்களை அகற்ற நகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.