இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 71 கிலோ ஹெரோயின் இந்தியாவில் மீட்பு – இருவர் கைது
இலங்கைக்குக் கடல் வழியாகக் கடத்தப்படவிருந்ததாகக் கூறப்படும் 71.24 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) கைப்பற்றியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய நிதி அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய ஹெரோயின் தொகைகளில் இதுவும் ஒன்றாகும்.
குறிப்பிட்ட புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், நவம்பர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் சென்னையில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட DRI அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றையும் அதனைப் பின்தொடர்ந்து சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றையும் இடைமறித்துச் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த வாகனத்திலிருந்து வெண்ணிறம் கலந்த தூள் வடிவிலான 69 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த எடை 71.24 கிலோகிராம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்தப் போதைப்பொருள் தொகை சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி (திருச்சி) ஊடாகக் கொண்டு செல்லப்பட்டு, கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த இரண்டு வாகனங்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இருவரும் இந்தியாவின் போதைப்பொருள் மற்றும் உளப்பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் தொடர்பான சட்டத்தின் (NDPS Act) கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதமும் நாகப்பட்டினம் அருகிலுள்ள கடலோரக் கிராமமொன்றில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, 137 கிலோகிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை DRI அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர். அந்தப் போதைப்பொருள் தொகையும் இலங்கைக்குக் கடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இயங்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதை இவ்வாறான தொடர் கைப்பற்றல்கள் வெளிப்படுத்துவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.