அழுங்கினத்தைச் சேர்ந்த எறும்புத்தின்னியை அடித்துக் கொன்ற சம்பவம்; மூவர் கைது – மேலதிக தகவல்களை வெளியிட்ட பொலிஸார்
பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனமான எறும்புத்தின்னி (Pangolin) ஒன்றைத் தாக்கிக் கொன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் குறித்து பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
குறித்த எறும்புத்தின்னியைத் தாக்கிக் கொல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் கடந்த நவம்பர் 18ஆம் திகதி பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, மீகஸ்வெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்தச் சம்பவம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் மீகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீகொல்லேவ பகுதியில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, 56, 34 மற்றும் 74 வயதுடைய மூன்று ஆண்கள் நவம்பர் 19ஆம் திகதி மீகஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் விவசாயத் தொழிலில் ஈடுபடுபவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எறும்புத்தின்னியைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கோடரி மற்றும் இரும்புக் கம்பி, செதில்களுடன் கூடிய உயிரிழந்த எறும்புத்தின்னியின் உடற்பாகங்கள், சம்பவம் தொடர்பான காணொளிகள் அடங்கிய மூன்று குறுந்தகடுகள் (CD) ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நவம்பர் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.