வாகன இலக்கத் தகடுகள், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான தாமதம் – 2027 ஆகஸ்ட் வரை காத்திருக்க வேண்டிய நிலை!
வாகன இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் நிலவும் தாமதங்களை 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாகத் தீர்க்க எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது.
உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் அண்மைய கூட்டத்தில், திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின்போது, வாகன இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நிலுவைகளைத் தீர்ப்பதற்கான காலக்கெடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
முந்தைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட காலக்கெடுவுடன் ஒப்பிடுகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலக்கெடு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் சுட்டிக்காட்டினார்.
எனினும், நிலுவைகளைத் தீர்ப்பதற்கு 2027ஆம் ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதமே எதிர்பார்க்கப்படும் காலப்பகுதி என ஏற்கனவே அறிவித்திருந்ததாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.