மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி; வாழ்நாள் முழுவதும் வாகனம் செலுத்தத் தடை விதித்த நீதிமன்றம்!
மதுபோதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 58 வயதுடைய சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் இரத்துச் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், குறித்த சாரதிக்கு 35,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த 05ஆம் இலக்க வழித்தடப் பேருந்தை, வியாழக்கிழமை (19) சங்கராஜ மாவத்தையில் வைத்து மருதானை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் சோதனையிடுவதற்காக நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், பொலிஸாரின் உத்தரவைப் பொருட்படுத்தாமல் சாரதி பேருந்தை தொடர்ந்து செலுத்திச் சென்றுள்ளார். இதனையடுத்து பொலிஸார் பேருந்தைத் துரத்திச் சென்று நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, சாரதி மதுபோதையில் இருப்பதாகச் சந்தேகித்த பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர் மது அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாரம்மல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய குறித்த சாரதி, கொழும்பு புதுக்கடை இலக்கம் 07 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 35,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் இரத்துச் செய்யவும் உத்தரவிட்டது.
இந்த நீதிமன்றத் தீர்மானம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.