வலி. வடக்கில் காணி விடுவிப்பைக் கோரி 30ஆவது வாரமாகவும் போராட்டம்
வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி, காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) 30ஆவது வாரமாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராணுவத்தினரின் கொமாண்டோ பங்களாவுக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலி. வடக்கில் உள்ள 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து குறித்த பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.
யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், குறித்த பகுதிகளில் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாததால், அப்பகுதிகள் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயங்களாகவே காணப்படுகின்றன.
இந்நிலையில், தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இதுவரையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், தமது கோரிக்கையை வலியுறுத்தி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போராட்டம் நடத்துவதற்கு அவர்கள் தீர்மானித்திருந்தனர்.
அதற்கமைய, இன்று 30ஆவது வாரமாகவும் காணி விடுவிப்பைக் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.