வட்டவளையில் உணவு ஒவ்வாமை: 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
வட்டவளையில் உள்ள பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெம்பஸ்டோவ் தோட்டப் பாடசாலையில் இன்று (17) செவ்வாய்க்கிழமை காலை வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட பின்னர் மாணவர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதன்போது மாணவர்கள் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட 35 மாணவர்களும் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸாரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் தனித்தனியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.