செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச விசாரணை கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் இன்று (நவம்பர் 17) யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்றை முன்னெடுத்தது.
அத்துடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொற்றுநோய் அல்லது இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கண்டுபிடிப்புகளை வன்மையாக எதிர்த்த போராட்டக்காரர்கள், குறித்த அறிக்கை குற்றச் செயல்களை மூடி மறைக்கும் முயற்சி எனக் குற்றஞ்சாட்டினர்.
இதேவேளை, குறித்த இடைக்கால அறிக்கையை உத்தியோகபூர்வமாக நிராகரிக்கக் கோரி சட்டத்தரணி கஸ்தூரி அஹலங்கன் ஏற்கனவே யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளார்.
இன்றைய போராட்டம் காலை யாழ்ப்பாணம் அரியாலை தபால் நிலையச் சந்தியில் இருந்து ஆரம்பமானது. அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்ட போராட்டக்காரர்கள், செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தைச் சென்றடைந்தனர்.