ஊழல் குற்றச்சாட்டு: ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித விளக்கமறியலில்!
சமகி ஜன பலவேகயவின் (SJB) ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அழைப்பாளரான டி.டி. ஆனந்த பாலிதவை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (CPC) இடம்பெற்றதாகக் கூறப்படும் 31 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா மேலதிக நேரக் கொடுப்பனவு மோசடி தொடர்பான விசாரணையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினரால் ஆனந்த பாலித நேற்று (16) கைது செய்யப்பட்டார்.
2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான ஐந்து வருட காலப்பகுதியில், பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவுகளில் சுமார் 31.1 இலட்சம் ரூபா முறைகேடு இடம்பெற்றுள்ளதாக விசாரணையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எரிபொருள் விலைகள் மற்றும் பெற்றோலியத் துறை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ச்சியாகக் கருத்துகளை வெளியிட்டு வந்த தொழிற்சங்கத் தலைவரான ஆனந்த பாலித, இந்த விசாரணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.