சத்தரதன தேரர் ஏன் கைது செய்யப்படவில்லை? பொலிஸாரிடம் விளக்கம் கோரும் நீதிமன்றம்
ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்படும் ராஜாங்கனே சத்தரதன தேரர் உள்ளிட்ட 25 இற்கும் மேற்பட்ட நபர்கள் இதுவரை கைது செய்யப்படாதது குறித்து விளக்கமளிக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அநுராதபுரம் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, குறித்த நபர்கள் கைது செய்யப்படாமை மற்றும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பௌத்த பிக்குகள், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட ஏழு சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகளான இந்திக இம்புல்பிட்டிய மற்றும் நுவன் பல்லந்துடாவ ஆகியோர் தாக்கல் செய்த பிணை மனுவை நிராகரித்தபோதே, இன்று (17) பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர், குறித்த பிணை மனுவில் உள்ளடக்கப்படவில்லை.
நீதிமன்ற விசாரணையின்போது, மோதலைத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்படும் ராஜாங்கனே சத்தரதன தேரர் உள்ளிட்ட 25 இற்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்படவில்லை என சந்தேகநபர்கள் தரப்பு சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், மோதலைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் பொலிஸார் அதனைத் தடுக்கத் தவறியதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
அத்துடன், காணொளிக் காட்சிகளின் அடிப்படையில், சம்பவத்தை வழிநடத்துவதில் பொலிஸ் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் சட்டத்தரணிகள் முன்வைத்தனர்.
இந்தச் சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்ட நீதவான், குறித்த நபர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுக்காதமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு அநுராதபுரம் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.