ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் அறிவுசார் சொத்துரிமை சேவைக் கட்டணங்களைத் திருத்த நடவடிக்கை
இலங்கையின் தேசிய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தினால் வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, முன்மொழியப்பட்ட புதிய கட்டணத் திருத்தங்கள் அடங்கிய 2026 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அறிவுசார் சொத்துரிமை ஒழுங்குவிதிகளை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த இந்தப் பிரேரணைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தினால் அறவிடப்படும் சேவைக் கட்டணங்கள் இறுதியாக 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2146/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் திருத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடைமுறையிலுள்ள கட்டணக் கட்டமைப்பைப் புதுப்பிக்கும் நோக்கில் புதிய ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்தப் புதிய ஒழுங்குவிதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 6 ஆம் திகதிய 2509/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2026 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அறிவுசார் சொத்துரிமை ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட கட்டணங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக, குறித்த ஒழுங்குவிதிகள் தற்போது நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளன.