வங்கி நெருக்கடியால் ஜனாதிபதி பதவி விலகல் – பராகுவேயில் அரசியல் நெருக்கடி!
பராகுவேயில் பாரிய டிஜிட்டல் வங்கி ஒன்றின் வீழ்ச்சியால் சுமார் 30 இலட்சம் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தைப் பெற முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா பதவி விலகியுள்ளார்.
அதிகரித்து வந்த அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில், காணொளி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், தேசிய ஸ்திரத்தன்மை, சமூக அமைதி மற்றும் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கில் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.
பராகுவேயின் வேகமாக வளர்ந்து வந்த டிஜிட்டல் கடன் வழங்கும் வங்கிகளில் ஒன்றான உயெனோ வங்கியின் (Ueno Bank) வீழ்ச்சியே இந்த அரசியல் நெருக்கடிக்குக் காரணமாக அமைந்துள்ளது.
வங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ஜனாதிபதிக்கு எதிராகப் பதவி நீக்க நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிகளை முன்னெடுத்ததுடன், நாடு முழுவதும் பாரிய போராட்டங்களும் வெடித்தன.
இதனையடுத்து, குறைந்தபட்ச நிதி வலிமைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதாகக் கண்டறிந்த அந்நாட்டு மத்திய வங்கி, உயெனோ வங்கியின் நிர்வாகத்தைக் கையகப்படுத்தி தலையீடு செய்தது.
சுமார் 30 இலட்சம் வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றி வந்த இந்த வங்கி, அரசாங்கத்திற்குச் சொந்தமான சுமார் 850 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியையும் நிர்வகித்து வந்துள்ளது. இதனால் அரசாங்க வைப்புகள் மற்றும் ஓய்வூதிய நிதிகளின் பாதுகாப்பு குறித்தும் பெரும் கவலைகள் எழுந்துள்ளன.
தங்களது சேமிப்புப் பணத்தை மீளப் பெற முடியாத வாடிக்கையாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டதுடன், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றது.
இதற்கிடையில், வங்கியின் முன்னாள் உரிமையாளருடன் ஜனாதிபதி பென்யாவுக்கு முன்னர் இருந்த வர்த்தகத் தொடர்புகள் காரணமாக நலன் முரண்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. எனினும், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என அவர் மறுத்துள்ளார்.
வங்கியின் வீழ்ச்சி தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனுடன் தொடர்புடைய எட்டு உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஜனாதிபதி சார்ந்த ஆளும் கொலராடோ கட்சியின் (Colorado Party) உறுப்பினர்கள் சிலரும் அவருக்கான ஆதரவை விலக்கிக் கொண்டமை, பதவி விலகுவதற்கான அரசியல் அழுத்தத்தை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், துணை ஜனாதிபதி பெட்ரோ அலியானா, ஜனாதிபதி பதவியை ஏற்று 2028ஆம் ஆண்டு வரை எஞ்சியுள்ள பதவிக்காலத்தை நிறைவு செய்யவுள்ளார்.