ட்ரம்பின் ‘ஹஷ் மணி’ வழக்கு: குற்றத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கறிஞர்கள் முன்னிலை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான ‘ஹஷ் மணி’ (Hush Money) வழக்கில் வழங்கப்பட்ட குற்றத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, அவரது வழக்கறிஞர்கள் இன்று (நவம்பர் 5) நியூயோர்க் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளனர்.
2024ஆம் ஆண்டு மே மாதம் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராகக் குற்றவியல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட முதல் சம்பவமாக வரலாற்றில் பதிவானது. தற்போது மீண்டும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் ட்ரம்ப், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில மற்றும் மத்திய நீதிமன்றங்களில் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு வழங்கப்பட்ட 130,000 அமெரிக்க டொலர் தொகையை மறைப்பதற்காக வணிகப் பதிவுகளில் பொய்யான தகவல்களைப் பதிவு செய்ததாக ட்ரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர், ட்ரம்பின் அப்போதைய சட்ட ஆலோசகரும் நெருங்கிய உதவியாளருமான மைக்கேல் கோஹன், ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு குறித்த தொகையை வழங்கியிருந்தார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ட்ரம்புடன் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் தொடர்பு குறித்து அவர் வெளிப்படையாகப் பேசுவதைத் தடுப்பதே இந்தப் பணப் பரிமாற்றத்தின் நோக்கமாக இருந்ததாகக் கூறப்பட்டது.
எனினும், தமக்கும் டேனியல்ஸுக்கும் இடையில் பாலியல் தொடர்பு எதுவும் இடம்பெறவில்லை என ட்ரம்ப் மறுத்துள்ளார்.
2017ஆம் ஆண்டு மைக்கேல் கோஹனுக்கு வழங்கப்பட்ட தொகையை ட்ரம்பின் நிறுவனம் சட்டச் செலவுகளாகக் கணக்குப் பதிவுகளில் குறிப்பிட்டிருந்தது. தேர்தல் காலத்தில் தமக்கு எதிரான தகவல்கள் வெளியாகாமல் தடுப்பதற்காகவே இந்தப் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியது.
ட்ரம்பின் வழக்கறிஞர்கள், இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட சட்ட வாதங்கள் பலவீனமானவை என்றும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், நடுவர் குழுவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற அறிவுறுத்தல்களிலும் குறைபாடுகள் இருந்ததாக அவர்கள் வாதிட்டுள்ளனர்.
அத்துடன், ட்ரம்பின் முதலாவது ஜனாதிபதிக் காலத்தில் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற உரையாடல்கள், அலுவலக நடைமுறைகள் மற்றும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவுகள் ஆகியவற்றை விசாரணையின்போது ஆதாரங்களாகப் பயன்படுத்தியமை சட்டரீதியாகப் பொருத்தமற்றது என்றும் அவரது வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் ட்ரம்பின் தரப்பு, 2018ஆம் ஆண்டு ஸ்டோர்மி டேனியல்ஸ் விவகாரம் பொதுவெளிக்கு வந்த பின்னர் அதற்குப் பதிலளித்தமை ஜனாதிபதியின் அரசியலமைப்புச் சார்ந்த கடமைகளில் ஒன்றாகும் எனத் தெரிவித்துள்ளது.
எனினும், மன்ஹாட்டன் மாவட்ட அரச சட்டத்தரணி ஆல்வின் பிராக் தலைமையிலான தரப்பு இந்த வாதங்களை நிராகரித்துள்ளது. தனிப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மேற்கொள்ளும் உரையாடல்கள் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளாகக் கருதப்பட முடியாது என்றும், எனவே அவற்றுக்கு ஜனாதிபதி சட்டப் பாதுகாப்பைக் கோர முடியாது என்றும் அரசுத் தரப்பு வாதிட்டுள்ளது.
மேலும், ட்ரம்புக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் உள்ளதாகவும், விசாரணையின்போது பயன்படுத்தப்பட்ட ஆதாரங்களும் நடுவர் குழுவுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களும் சட்டபூர்வமானவை என்றும் அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும், ட்ரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கு அது தடையாக அமையவில்லை. அதேவேளை, அவருக்கு இதுவரை எந்தவொரு தண்டனையும் விதிக்கப்படவில்லை.
இதற்கிடையில், இந்த வழக்கை மாநில நீதிமன்றத்திலிருந்து மத்திய நீதிமன்றத்துக்கு மாற்றி, ஜனாதிபதிக்கான சட்டப் பாதுகாப்பின் அடிப்படையில் வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறும் ட்ரம்ப் தரப்பு முயற்சித்து வருகிறது. எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய நீதிமன்ற நீதிபதி மூன்றாவது முறையாகவும் அந்தக் கோரிக்கையை நிராகரித்தார்.
அந்தத் தீர்ப்புக்கு எதிராகவும் ட்ரம்பின் வழக்கறிஞர்கள் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அது தொடர்பான வாதங்கள் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளன.