2028 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: ‘அடுத்த பராக் ஒபாமா’ என வர்ணிக்கப்படும் ஜோன் ஒசோஃப் முன்னணி வேட்பாளராக உருவெடுப்பு
அமெரிக்காவின் 2028ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடக்கூடிய முன்னணி நபர்களில் ஒருவராக செனட்டர் ஜோன் ஒசோஃப் உருவெடுத்துள்ளார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜோர்ஜியா மாநிலத்தில் மீண்டும் செனட்டராகத் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 39 வயதான ஜோன் ஒசோஃப்பின் அரசியல் செல்வாக்கும் ஜனாதிபதித் தேர்தல் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் ஒப்பிடப்படும் ஒசோஃப், தனது பேச்சாற்றல், இளம் வயது மற்றும் ஜனநாயகக் கட்சியின் பல்வேறு தரப்பினரிடையே பெற்றுள்ள ஆதரவு காரணமாகக் கவனம் ஈர்த்துள்ளார்.
'Polymarket' என்ற கணிப்பு சந்தைத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, 2028 ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கான ஒசோஃப்பின் வாய்ப்பு 24 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 24 மணி நேரத்திற்குள் ஒன்பது சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளதாக 'The Independent' செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, 2028 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான அவரது வாய்ப்பு சுமார் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், குறித்த கணிப்புத் தளத்தில் ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோரையும் அவர் முந்தியுள்ளார்.
ஜோர்ஜியா மாநிலத்தில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மைக் கொலின்ஸை எதிர்த்துப் போட்டியிட்ட ஒசோஃப், சுமார் 58.9 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். அவர் 24 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தார். ட்ரம்ப் தோல்வியடைந்த ஜனாதிபதி என வர்ணித்ததுடன், அவரது நிர்வாகம் ஊழல் மற்றும் திறமையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
2021ஆம் ஆண்டு முதன்முறையாக செனட்டராகத் தெரிவு செய்யப்பட்ட ஒசோஃப், தனது தேர்தல் பிரசாரத்திற்காக 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியைத் திரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது அவரது தேசிய அரசியல் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் 2028ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடியவர்களாக அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
எவ்வாறாயினும், தற்போது வெளியாகியுள்ள சதவீதங்கள் பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் அடிப்படையிலானவை அல்ல. அவை கணிப்பு சந்தையில் இடம்பெறும் வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட மதிப்பீடுகள் என்பதுடன், ஜனநாயகக் கட்சியின் உத்தியோகபூர்வ வேட்பாளர் தெரிவையோ அல்லது தேர்தல் முடிவுகளையோ உறுதிப்படுத்துபவையாகக் கருத முடியாது.