ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது கேமராமேன் தாக்குதல்: பொலிஸில் முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாதுகாப்பு வழங்கிய அதிகாரி ஒருவர் மீது தொலைக்காட்சி கேமராமேன் தாக்குதல் நடத்தியதாகக் கூறி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே செப்டம்பர் 30 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி, விசாரணைகளின் பின்னர் வெளியேறியபோதே நீதிமன்ற வாயிலுக்கு அருகில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருந்த வேளையில், ஊடகவியலாளர் ஒருவர் தமது கேமராவினால் பாதுகாப்பு அதிகாரியின் தலையில் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த அதிகாரி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன், இச்சம்பவமானது அங்ஙனம் செய்திச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஏனைய ஊடகவியலாளர்களின் கேமராக்களிலும் பதிவாகியுள்ளதாக அக் கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் முறைசார்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தனவா என்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, முன்னாள் ஜனாதிபதிக்கு அசம்பாவிதம் ஏதேனும் விளைவிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட சதியா இது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.