மிஷ்கின் – விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ திரைப்படம் டிசம்பர் 4-ல் வெளியீடு!
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ட்ரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம், பல்வேறு காரணங்களால் வெளியீட்டில் தாமதத்தைச் சந்தித்து வந்தது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “பயணத்துக்குத் தயாராகுங்கள். ‘ட்ரெயின்’ திரைப்படம் டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையை உணர்த்தும் ரயில் பயணம்!
‘ட்ரெயின்’ திரைப்படத்தின் கதைக்களம் குறித்து ஏற்கெனவே பேசியிருந்த இயக்குநர் மிஷ்கின், ரயில் பயணத்தை ஓர் உருவகத்தின் மூலம் விளக்கியிருந்தார்.
ரயிலைப் பார்க்கும்போது, ஒரு ராட்சதப் புழு தனது வயிற்றில் பலரை ஏற்றிக்கொண்டு வேறொரு இடத்தில் அவர்களை இறக்கிவிடுவது போன்ற உணர்வு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அத்தகைய பயணத்தில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஏறி இறங்குகின்றனர். அவர்களில் சிலர் உயிரிழக்கவும் செய்கின்றனர் என அவர் தெரிவித்திருந்தார்.
வாழ்க்கையை வெறுத்த நிலையில், தனது மனைவியின் சமாதியில் ஒரு சிறிய செடியை நட்டுவிட்டு ரயிலில் ஏறும் கதாநாயகன், அந்தப் பயணத்தின்போது பல்வேறு சம்பவங்களில் ஈடுபடுகிறான். இறுதியில், அந்தப் பயணம் அவனுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தைக் கற்றுக்கொடுக்கிறது என்பதே படத்தின் மையக்கரு என மிஷ்கின் விளக்கியிருந்தார்.
நட்சத்திரப் பட்டாளத்துடன் மிஷ்கின் இசை!
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதி ஹாசன், நாசர், டிம்பிள் ஹயாதி, ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளார். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ‘ட்ரெயின்’ திரைப்படம் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.