மதுராந்தகம் இடைத்தேர்தல்: தொழுப்பேட்டில் நாளை முதல்வர் விஜய் தீவிரப் பிரச்சாரம்!
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக (TVK) வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, தமிழக முதல்வர் விஜய் நாளை (செப்டம்பர் 25) தொழுப்பேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் பங்கேற்று வாக்கு சேகரிக்கவுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாகப் பல்வேறு அமைச்சர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக முதல்வர் விஜய் நாளை தொழுப்பேடு பகுதிக்கு வருகை தருகிறார். இதற்கென அப்பகுதியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டப் பிரச்சாரக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் 30 ஏக்கர் நிலப்பரப்பு வாகனப் போக்குவரத்தைச் சீரமைக்கும் வகையில் வாகன நிறுத்தத்திற்காகவும் (Parking space), மீதமுள்ள பகுதி தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் அமர்ந்து உரையைக் கேட்கும் வகையிலும் நாற்காலிகள் அமைக்கப்பட்டுத் தயார் செய்யப்பட்டுள்ளது.
நாளை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் உரையாற்றவுள்ளதால், அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (National Highway) வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு மாற்றுப் பாதை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.வீரப்பன் தெரிவித்துள்ளார்.