டெல்லியில் கொடூரம்: 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை
இந்தியத் தலைநகர் டெல்லியில் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்வரூப் நகர், குஷாக் சாலைக்கு அருகில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் இருந்து கடந்த 13 ஆம் திகதி அழுகிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலத்தின் சில பாகங்களை தெரு நாய்கள் கடித்துத் தின்ற நிலையில் மீட்கப்பட்டதால், ஆரம்பத்தில் அவரது பாலினத்தைக்கூட அடையாளம் காண்பதில் தடயவியல் நிபுணர்களுக்குச் சிக்கல் நிலவியது.
சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், சம்பவ இடத்திற்கு அருகில் சந்தேகத்திற்குரிய முறையில் சென்று வந்த சரக்கு வாகனம் ஒன்றை அடையாளப்படுத்தினர். போதிய வெளிச்சமின்மை காரணமாக வாகனத்தின் இலக்கத் தகடை உடனடியாக கண்டறிய முடியாவிட்டாலும், தொடர் தேடுதலின் மூலம் அந்த வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் ஸ்வரூப் நகர் குடியிருப்புப் பகுதியில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
ஓட்டுநரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், இக்கொடூரக் குற்றத்தில் தொடர்புடைய நான்கு நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் 16 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் என்பதும், மற்றொருவர் சிவம் என்பதும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், "கொலை செய்யப்பட்ட சிறுமியும் சந்தேகநபர்களும் ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிமுகமானவர்கள். சம்பவத்தன்று இவர்கள் ஐவரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன் பின்னரே இச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, இரண்டு கத்திகளைப் பயன்படுத்தி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்திகள், சந்தேகநபர்களின் ஆடைகள் மற்றும் சரக்கு வாகனம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன" எனக் குறிப்பிட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், தங்களது மகள் சில நாட்கள் வெளியூர் செல்வதாகக் கூறிவிட்டே வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.