நொய்டாவில் ஓடும் பேருந்தில் தீ விபத்து: பெண் உட்பட 9 பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு
டெல்லியில் இருந்து பிஹார் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்றில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பெண் ஒருவர் உட்பட 9 பயணிகள் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெல்லி-ஆக்ரா இடையிலான யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் 33-வது கிலோமீட்டர் மைல்கல் அருகே இரவு 11:00 மணியளவில் பேருந்து சென்று கொண்டிருந்தபோதே இப் பேரழிவு சம்பவித்துள்ளது.
பிஹார் மாநிலப் பதிவு இலக்கத்தைக் கொண்ட இப் பேருந்தில் சுமார் 35 முதல் 40 பயணிகள் வரை பயணித்துள்ளனர். பேருந்தின் குளிரூட்டி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கோளாறே தீப் பரவலுக்கு முதன்மை காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புகை மூட்டத்தால் திணறிய பயணிகள்:
பேருந்தில் தீப்பற்றியதும் உட்பகுதி முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால் வெளியேறும் வழியைக் கண்டறிய முடியாமல் பயணிகள் கடும் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியுள்ளனர். சில பயணிகள் பீதியில் ஓடும் பேருந்தில் இருந்தவாறே ஜன்னல்கள் வழியாக வெளியே குதித்துத் தமது உயிர்களைத் தப்பவைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக கைலாஷ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக ஜேவார் காவல் ஆய்வாளர் அஜய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
பயணிகளின் எச்சரிக்கையைப் புறக்கணித்த சாரதி:
பேருந்து தீப்பிடிப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்னர், ஏதோ கருகும் துர்நாற்றம் வீசுவதாகப் பயணிகள் சுட்டிக்காட்டியபோதிலும், சாரதியும் நடத்துனரும் அதை அலட்சியப்படுத்தியதாகத் தப்பிய பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். "இது வழக்கமான ஒன்றுதான்" எனக் கூறிப் பேருந்தை நிறுத்த மறுத்த ஊழியர்கள், தீப் பரவியதும் பயணிகளைக் கைவிட்டுச் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.
எனினும், தலைமறைவான சாரதி, நடத்துனர் உட்பட மூவரைக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் கைது செய்துள்ளனர்.
முதலமைச்சர் இரங்கல்:
இத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்த மக்களுக்குத் தாமதமின்றிச் சிறந்த மருத்துவச் சிகிச்சைகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
விபத்துக்கான துல்லியமான காரணம் மற்றும் பேருந்தின் தகுதிச் சான்றிதழ்கள் குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்தும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.