மக்கா பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்ட ஹூதி ட்ரோன் சுட்டு வீழ்ப்பு!
சவூதி அரேபியாவின் மக்கா பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்ட ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானம் (ட்ரோன்) இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதாக யேமனில் செயற்படும் சவூதி தலைமையிலான கூட்டுப்படை அறிவித்துள்ளது.
இந்தத் தகவலை கூட்டுப்படையின் பேச்சாளர் துர்கி அல் மாலிகி வெள்ளிக்கிழமை (30) சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஹூதி பயங்கரவாதக் கிளர்ச்சிப் படையினரால் ஏவப்பட்ட ட்ரோன், மக்கா பிராந்தியத்தில் இடைமறித்து அழிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, மேற்கு சவூதி அரேபியாவை இலக்காகக் கொண்டு ஏவப்பட்ட ஹூதி கிளர்ச்சியாளர்களின் குரூஸ் ஏவுகணையையும் கூட்டுப்படையின் வான் பாதுகாப்புப் பிரிவினர் இடைமறித்து அழித்ததாக அல் மாலிகி தெரிவித்திருந்தார்.
சவூதி தலைமையிலான கூட்டுப்படைக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் அண்மைய நாட்களில் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இரு தரப்பினரும் அண்மைக்காலமாக பல்வேறு இராணுவ நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட இலக்குகளைக் குறிவைத்து ஆறு தாக்குதல்களை நடத்தியதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் வியாழக்கிழமையும் அறிவித்திருந்தனர்.
யேமனில் கடந்த 2014 செப்டெம்பரில் தலைநகர் சனாவைக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசாங்கத்துக்கு ஆதரவாக சவூதி தலைமையிலான கூட்டுப்படை 2015 மார்ச் மாதம் முதல் அந்நாட்டின் மோதலில் தலையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.