போதைப்பொருள் கட்டுப்பாட்டு சட்டத்தை அக்டோபரில் நிறைவேற்ற ஜனாதிபதி உத்தரவு
இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாராளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டமூலத்தை அக்டோபர் மாதத்தின் மூன்றாவது வாரத்திற்குள் நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று (30) நடைபெற்ற, போதைப்பொருள் ஒழிப்புக்கான "ஒன்றிணைந்த தேசம்" தேசிய செயல்பாட்டு பேரவைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இக்கட்டளையைப் பிறப்பித்தார்.
முன்மொழியப்பட்டுள்ள இச்சட்டமூலத்தை அக்டோபர் முதல் வாரத்தில் உரிய பாராளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி ஒப்புதலைப் பெறுமாறும், அதன் பின்னர் அக்டோபர் மூன்றாவது வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு நிறைவேற்றுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
அரசு இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் செயல்திறன் உயர்வு
அரசு இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் வசதிகளை விரிவாக்கம் செய்து, அதன் செயல்திறனை உயர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலனாக, செப்டம்பர் மாதத்தில் மட்டும் போதைப்பொருள் தொடர்பிலான 8,000 அறிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது.
கடற்படைப் பணியாளர்களின் பங்களிப்புடன் தரவு உள்ளீட்டுச் செயல்பாடுகள் முடுக்கப்பட்டுள்ளதால், தினமும் வெளியிடப்படும் அறிக்கைகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, போதைப்பொருள் வழக்குகளில் சிறையிலிருந்த பலருக்கு பிணை (Bail) கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடி வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
பெற்றோர் மற்றும் பாடசாலைகளின் பங்களிப்பு
சட்ட அமலாக்கத்தால் மட்டும் போதைப்பொருளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க முடியாது என்றும், அதற்குப் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான வலுவான உறவு அவசியம் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, போதைப்பொருளின் ஆபத்து குறித்தும் பிள்ளைகளின் நடத்தை மாற்றங்களைக் கண்காணிப்பது குறித்தும் பெற்றோருக்கு நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வலுவான கட்டமைப்பு ஒன்றை உருவாக்குமாறு உத்தரவிட்டார்.
பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் அபாயம் இருப்பதாகப் பெற்றோர் சந்தேகிக்கையில், அவர்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய வழிகாட்டிகள் தேவைப்படுகின்றனர். வழக்கமாக ஆசிரியர்கள் அல்லது மதத் தலைவர்களையே பெற்றோர் அணுகுவதால், அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளை வழங்கி, நம்பகமான வழிகாட்டலை வழங்கும் முறைமை ஒன்றை உருவாக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
1818 அவசர தொலைபேசி இலக்கம் மற்றும் பொதுமக்கள் நம்பிக்கை
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் தொடர்பில் தகவல்களை வழங்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள '1818' அவசர அழைப்பு இலக்கத்தைச் (Hotline) தொடர்ச்சியாகச் செயல்பாட்டில் வைப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொள்வதன் மூலம், மக்கள் மத்தியில் அமைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.