போதைப்பொருள் கடத்தல் பணத்தில் வாங்கப்பட்ட ரூ.55 இலட்சம் பெறுமதியான டிப்பர் வாகனம் முடக்கம்!
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 55 இலட்சம் ரூபாய் பெறுமதியான டிப்பர் வாகனத்தை, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு 14 நாட்களுக்கு முடக்கியுள்ளது.
உஸ்வெட்டகெய்யாவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்தி, தனது மனைவியின் பெயரில் இந்த டிப்பர் வாகனத்தைக் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, குறித்த வாகனத்தை விற்பனை செய்தல், உரிமையை மாற்றுதல் அல்லது வேறு வழிகளில் அப்புறப்படுத்துதல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த முடக்க உத்தரவு நவம்பர் 13ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
குறித்த போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய ஏனைய சொத்துக்கள் குறித்தும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.