பியாகமவில் 4.25 கோடி ரூபா பெறுமதியான இரு கஜமுத்துக்கள் மீட்பு: மூவர் கைது!
பியாகம பகுதியிலுள்ள விடுதியொன்றில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, 42.5 மில்லியன் (4.25 கோடி) ரூபா பெறுமதியான இரண்டு கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹொரகொல்ல தேசிய பூங்காவின் வனப்பரிபாலன அதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, அப்பூங்காவின் அதிகாரிகள் மற்றும் மேல் மாகாண உதவிப் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் இணைந்து இந்தச் சோதனையை முன்னெடுத்திருந்தனர்.
விற்பனைக்காகத் தயார்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்டதுடன், இது தொடர்பில் மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹிங்குராக்கொட , தொடாந்துவ மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வதிவிடவாசிகளாவர்.
கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்கள் மற்றும் சந்தேகநபர்கள் எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
வன விலங்கின மற்றும் தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், யானை போன்ற பாதுகாக்கப்பட்ட பாலூட்டிகளின் உடல் பாகங்களை வைத்திருத்தல், காட்சிப்படுத்துதல், கொண்டு செல்லுதல் அல்லது விற்பனை செய்தல் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்ட குற்றமாகும்.
சந்தேகநபர்களுக்கு இந்தக் கஜமுத்துக்கள் எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.